சரியான வாழ்க்கை முறை
நமது தாத்தா, பாட்டி வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையைக் கூட சொல்லலாம். நேரத்துக்கு சத்தான உணவு, நல்ல பழக்கவழக்கங்கள், அரைத்தல், ஆட்டுதல், துவைத்தல், நடத்தல் என அன்றாடப் பணிகள் மூலம் கிடைத்த உடற்பயிற்சி, எல்லாவற்றுக்கும் மேலாக நல்லதையே நினைக்கும் மன ஒழுக்கம், எதற்கும் பதறாமல் நிதானமாக யோசித்து முடிவெடுப்பது என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இன்றைய வாழ்க்கை முறை அப்படியா இருக்கிறது? நேரம் கெட்ட நேரத்தில் உணவு, நிதானமாக எதுவும் செய்ய முடியாத அவசரம், குறைந்துவிட்ட உடல் உழைப்பு, எதற்கும் டென்ஷன், கோபம், பகைமை என உடல், மனம் இரண்டுமே கெட்டுப் போய்க்கிடக்கிறதே!
நமது எளிமையான வாழ்க்கை முறையை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டாலும், வெளிநாட்டினர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு "ஏஜ் மேனேஜ்மென்ட்" (Age Management) கருத்தரங்கில், "கட்டுப்படுத்தப்பட்ட கலோரி அளவில் உணவு உட்கொண்டு வந்தால் நீண்ட நாள் வாழலாம்" என்று ஒரு மருத்துவர் ஆய்வு முடிவுகளை சமர்ப்பித்தார்.
இது ஒன்றும் புதிய கருத்தல்ல! நம் யோகிகளும், முனிவர்களும் முன்பே சொல்லிவிட்டு போனதுதான் அதன்படியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். மேலும் ஜீரண மண்டலம் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு "லங்கணம் பரம ஒளஷதம்" என்பது நமது சான்றோர் மொழியாயிற்றே!